Ad Widget

ஜெயசங்கர் – சம்பந்தன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுச் செயலாளர் எஸ்.ஜெயசங்கர் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை கொழும்பில் சுமார் ஒரு மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு குறித்து பிரதானமாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதற்கு மேலதிகமாக சுயாதீன ஆணைக்குழு நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக, எஸ்.ஜெயசங்கர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்காவும் கலந்து கொண்டிருந்தார்.

இது இவ்வாறு இருக்க இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, இந்திய வௌியுறவுச் செயலாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட குழுவினர், இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்திய வௌியுறவுச் செயலாளர் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

Related Posts