Ad Widget

ஜெகனுக்கு எதிரான விந்தனின் முறைப்பாடு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம்!

தனது பெயர், முகவரி, புகைப்படம் என்பவற்றைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த கே.வி.குகேந்திரன், அவதூறான செய்தியை ஊடகங்குளுக்கு அனுப்பி, அவற்றை பிரசுரிக்குமாறு கோரியமை குறித்து தன்னால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்காகக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கரகரத்தினம் தெரிவித்துள்ளார்.

vinthan-kanakaraththinam

இது குறித்த அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

எனக்கு எதிராக ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் அல்லது வி.கே.ஜெகன் என்பவர் தனது உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியூடாக எனது பெயருக்குக் களங்கம் விளைவித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக உண்மைக்கு புறம்பான செய்திகளை கடந்த செப்ரெம்பர் மாதம் ஐந்தாம் திகதி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு விடுத்திருந்தார்.

அவதூறு செய்தியை எனக்கெதிராக விடுத்திருந்த ஈ.பி.டி.பி ஜெகனுக்கு எதிராக நான் கடந்த ஐப்பசி மாதம் ஏழாம் திகதி யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்து இருந்தேன். நீண்ட நாட்களுக்கு பின் இம்மாதம் இருபத்தியாறாம் திகதி யாழ். பொலிஸார் என்னை அழைத்து குறித்த முறைப்பாடு தொடர்பான ஏழு பக்க ஆதாரங்களை கொண்ட ஆவணங்களை பெற்றுள்ளதோடு குறித்த ஆவணங்களை பரிசீலித்த பொலிஸார் இது தண்டனைக்குரிய குற்றம் எனக்கூறி மேலுமொரு முறைப்பாட்டினை பதிவிசெய்துகொண்டனர். குறித்த முறைப்பாட்டை குற்றப்புலனாய்வாளர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் எனக்கூறி அன்றைய தினமே விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பாரப்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.-என்றுள்ளது.

Related Posts