Ad Widget

ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்!

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனிய எண்ணெய் சேவையாளர்களை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு, பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து திருகோணமலை சீனக்குடா எண்ணெய் களஞ்சிய தொகுதிகளை மீட்க வேண்டும், அம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் களஞ்சிய தொகுதிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டும், சபுகஸ்கந்த எரிபொருள் சத்திகரிப்பு ஆலையை நவீனமயப்படுத்த வேண்டுமென கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, விசேட வர்த்தமானி மூலம் எரிபொருள் விநியோகத்தை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனையத்து, நாட்டிற்கு எரிபொருளை விநியோகிக்கும் பிரதான எண்ணெய் களஞ்சியசாலைகளான முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைகளுக்கு பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், குறித்த களஞ்சியசலைகளை ஊழியர்கள் முடக்கி வைத்ததோடு, பொலிஸாரையும் அனுமதிக்காத நிலையில், பெருமளவான ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டு குறித்த களஞ்சியசாலைகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடாத தனியார் பௌசர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் அதேவேளை, பணிக்கு திரும்பாதவர்கள் தாமாக பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதியும் ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறு பணிக்கு திரும்பாத பட்சத்தில் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ராணுவம் ஈடுபடுமென தெரிவிக்கப்படுகிறது.

Related Posts