Ad Widget

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பிரதமர் மோடி அவர்களை புதுடில்லியில் சந்தித்தார்

இன்று காலை புதுடில்லியில் ஹைதராபாத் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை வரவேற்றார். அங்கு இரு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

Rajapaksa and new Indian Prime Minister Narendra Modi

இரு தலைவர்களுக்குமிடையில் பரஸ்பரம் கவனம்செலுத்த வேண்டிய விடயங்கள்பற்றி ஆழமாக ஆராயப்பட்டது. அதன்போது ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், புனரமைப்பு மற்றும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாகவும் விபரித்தார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடினார்கள். இரு நாடுகளின் மீனவர்களும் பயன்பெறக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப்பற்றியும் கலந்துரையாடினார்கள். மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்ததைகளும் இணைந்த குழுவின் அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளும் தொடர வேண்டும் என இருதலைவர்களும் உடன்பட்டார்கள்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இப் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டமைக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சார்க்(தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு) நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டமை எதிர்காலத்தில் சார்க் நாடுகளின் ஒத்துழைப்புக்கும் ஐக்கியத்துக்கும் நல்லதொரு சகுணமாகும் எனவும் குறிப்பிட்டார். பிராந்தியத்துக்கு பொதுவாக நன்மை தரக்கூடிய விடயங்கள்பற்றி சார்க் நாடுகள் கவனம்செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட இந்திய பிரதமர் அவர்கள் அது எமக்கு உலகளாவிய ரீதியில் நன்மைபயக்கும் எனவும் கருத்துத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி அவர்களின் கருத்தை வரவேற்ற ஜனாதிபதி ரரிஜபக்ஷ அவர்கள் இந்தியாவின் தலைமைத்துவம் பிராந்திய நாடுகளின் செயற்பாடுகளுக்கு பெரிதும் நன்மைபயக்கும் எனத் தெரிவித்ததோடு சார்க் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இந்திய பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு மோடி அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (மே26) புதுடில்லி சென்றிருந்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கால்நடை வளர்ப்பு கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, யாழ்ப்பாண மாநகரசபை தலைவி திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்ன புதுடில்லியில் உள்ள
இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts