அதிநவீன சிறுநீரகக்கல் அகற்றும் சிகிச்சை மையம்!!

அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டடத்தில் நாடு முழுவதும் சேவையாற்ற கூடிய “மிரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம்” எதிர்வரும் 12ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக வழங்கப்பட உள்ளது.

இலங்கையில் சிறுநீரக கல் நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையமாகவும், சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக தற்போதுள்ள 5000 இற்கும் மேற்பட்ட காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கும் தீர்வாக, “மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை நிலையம்” எதிர்வரும் 12ஆம் திகதி காலை வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சிறுநீரக கல் நோய் (Kidney Stone Disease) இலங்கையில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் 30 இற்கும் மேற்பட்ட விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவுகள் விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களால் பணியாற்றினாலும், சிகிச்சைக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, உள்கட்டமைப்பின் குறைவான வளங்கள், குறைவான அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் நவீன எண்டோரோலாஜிக்கல் தொழில்நுட்பத்திற்கான குறைவான வளங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இலங்கையில் சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் தற்போது 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றா நோய்கள் (NCD) செயலணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை பரிசீலித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனையின் பேரில், இலங்கை சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (SLAUS) அனுசரணையில், சிறுநீரக நோயாளர்களுக்கான விசேட சிகிச்சை நிலையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் விசேட சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர்கள் தமது நோயாளர்களை இந்த நிலையத்திற்கு அழைத்து வந்து நவீன தொழில்நுட்ப வசதிகளின் கீழ் உயர்திறன் வாய்ந்த சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குகின்றனர். அரசாங்க சுகாதார சேவையில் பணிபுரியும் அனைத்து விசேட சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கும் இதன் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும், சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையத்தின் தொடக்கத்தில், புகழ்பெற்ற தொழிலதிபரும் பொறியாளருமான நஹீல் விஜேசூரிய, தேவையான நவீன உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர், டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் அதிகாரிகள், மிரிகம வைத்தியசாலையின் பணிப்பாளர் சமிந்த பிரேமரத்ன, மாகாண சுகாதார அதிகாரிகள், இலங்கை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அப்பகுதியின் அரசியல் பிரதிநிதிகள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

Related Posts