Ad Widget

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை யாழில் 6 நாட்களுக்கு நடைபெறும்

காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதி வரை யாழ். மாவட்டத்தில் நடைபெறும் என யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்

யாழ். மாவட்டச்செயலர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பாக 2 ஆயிரத்து 539 பேர் தமது முறைப்பாடுகளை காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் பதிவுசெய்துள்ளனர்.

அந்த வகையில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 501 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 219 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 558 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 561 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 463 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 237 பேரும் தமது பதிவினை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான படிவங்கள் ஜனாதிபதி ஆணைக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான விசாரணைகள் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை குறிக்கப்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலத்திலும் விசாரணைகள் நடை பெறவுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும்,

12 ஆம் திகதி நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு வேலணை பிரதேச செயலகத்திலும்,

13 ஆம் திகதி சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பழை ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலும்,

14 ஆம் திகதி வடமராட்சி, கரவெட்டி, மருதங் கேணி, பருத்தித்துறை ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும்,

15 ஆம் திகதி தென்மராட்சி பிரிவை சேர்ந்தவர்களுக்கு சாவகச்சேரி பிரதேசசெயலகத்திலும், 16 ஆம் திகதி வலி.கிழக்கு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

முறைப்பாடுகளை பதிவு செய்தவர்கள் தமது பெயர் விபரங்களை பரிசீலனை செய்ய விரும்பினால் அந்த ந்த பிரதேச செயலகங்களில் சென்று பரிசீலிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts