Ad Widget

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

mahinthaவடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்படும் காலம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2014 ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை 6 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்துத் பிரதேசங்களிலிருந்தும் மேற்படி ஆணைக்குழுவுக்கு 16,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் முதற்கட்ட நடவடிக்கை கடந்த 17ஆம் திகதியுடன் நிறைவுற்றது. கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கிளிநொச்சியில் முறைப்பாடுகள் பதியப்பட்டன.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதக் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகமவை தலைவராகக் கொண்ட இக்குழுவில் பிரியந்த சுரஞ்ஜனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 9.51 பரிந்துரையின் பிரகாரம் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts