Ad Widget

ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

mahinthaஇலங்கையில் அண்மைக் காலங்களாக நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பதுளையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தலைநகர் கொழும்பை அண்டிய பாணந்துறை பகுதியில் நேற்றறு சனிக்கிழமை அதிகாலை முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான நோ லிமிட் என்ற உடுதுணிக் கடை தீக்கிரையான சம்பவத்தை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அவ்வேளையில், கொழும்பிலிருந்து தொலைவில் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பதுளை நகரில் இருந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதற்கு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இதனையடுத்து ஹெலிகாப்டரில் உடனடியாக விரைந்த ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏஎச்எம் பௌசி உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பில் பசில் ராஜபக்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் பொலிஸ் மா அதிபர் என்.பி. இலங்ககோன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் வன்முறைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்வதாக இதன்போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு எங்களுக்கு முன்னால் மிகக்கடுமையான உத்தரவை பணித்தார்… அதாவது சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது, அவர்கள் எந்த மதத்தையோ தரத்தையோ சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறினார்’ என்றார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
இதனிடையே, அண்மைக்கால அசம்பாவிதங்கள் தொடர்பில் உயர்மட்டக் குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் குறுந்தகவல் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts