Ad Widget

ஜனாதிபதியின் செயற்பாடு வெறும் கண்துடைப்பா? : சிவாஜிலிங்கம் கேள்வி

சிறையிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொலைசெய்ய முயற்சித்தவருக்கு பொது மன்னிப்பு வழங்கியமை வெறும் கண்துடைப்பா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 200 தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித விசாரணைகளும் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், இவர்களின் விடுதலை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அவை கருத்திற்கொள்ளப்படவில்லையென குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக கடந்த 1971ஆம், 1988ஆம் மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் பலர் விடுவிக்கப்பட்டதோடு, போர் நிறைவடைந்த பின்னரும் 12 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த 200 பேரின் விடுதலை தொடர்பாக மாத்திரம் அரசாங்கம் முரண்டுபிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த 200 அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தும் விசேட பிரேரணையொன்றை, நாளைய தினம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை அமர்வில் முன்வைக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Related Posts