Ad Widget

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு! : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடிதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த பணிப்புரையை, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரணவை இன்று (புதன்கிழமை) சந்தித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஜனாதிபதியின் மேற்படி கோரிக்கையை நிராகரித்து கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக கடந்த காலங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவானது, வவுனியா மாவட்ட செயலகத்தில் முழுமையான பதிவுகளை மேற்கொண்டிருந்தது. எனினும், முன்னாள் ஜனாதிபதியைப் போன்றே தற்போதைய ஜனாதிபதியும் காலத்தை இழுத்தடிப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் பதிவுகளை மேற்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ள உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் பதில் வழங்கியே தீர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் மாதக்கணக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வவுனியாவில், கடந்த 293 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts