Ad Widget

ஜனாதிபதியிடமிருந்து சாதகமான தீர்வு கிட்டும்: சிவாஜிலிங்கம் நம்பிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இலங்கை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான தீர்வொன்றை பெற்றுத்தருவார் என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு குறித்து யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

”தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான தீர்வொன்றை நிச்சயம் வழங்குவார் என நாம் நம்புகிறோம். வழங்காவிட்டால் அடுத்து என்ன செய்வது என்பதை தீர்வு எட்டப்படாத பட்சத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், அதுவரை அரசாங்கம் எம்மை ஏமாற்றிவிட்டதாக எண்ணத் தேவையில்லை.

சிறையிலுள்ள 117 தமிழ் அரசியல் கைதிகளில் 12 கைதிகள் மேன்முறையீடு செய்துள்ளனர். அதேபோன்று சுமார் 20 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றில் நடத்துவதால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் ஆகியோர் சுதந்திரமாக பாதுகாப்பாக நடமாடும் போது, சாட்சிகளுக்கு மாத்திரம் எப்படி பாதுகாப்பற்று போகும் என கேள்வியெழுப்பினேன்.

இந்நிலையில், சட்டமா அதிபர், நீதி அமைச்சர் ஆகியோர் இலங்கை வந்த பின் சாதகமான தீர்வை தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே சாதகமான தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையும் காத்திருப்போம்” என்றார்.

Related Posts