Ad Widget

ஜனநாயகம் உதட்டளவில், ஐ.நா.பிரதிநிதிகளிடம் வடமாகாண முதலமைச்சர்

எங்களுடைய மத்திய அரசாங்கம் தனது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனநாயகம் என்பது பெயரளவில் தான் இங்கு இருக்கின்றர் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Un-vicky

ஜ.நாவின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மேரி ஜமஸிதாவிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ்.கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நா பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வடமாகாணத்தின் அரசியல் விவகாரகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அரசியல் ரீதியாக எங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பிலும் ஐ.நா பிரதிநிதிகள் கேட்டார்கள். முக்கியமாக இங்கு தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில் பல விதங்களிலும் ஐனநாயகம் திரும்ப வந்திருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றதா என என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

‘இங்கு ஜனநாயகம் என்பது பெயரளவில் தான் இருக்கின்றது’ என நான் சொல்லியிருக்கின்றேன். 2009, 2010, 2011, 2012 வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டும் அவை நடைபெறாத நிலையில் இந்தியாவின் அழுத்தம் காரணமாக வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் அதனைக்கொண்டு நடத்துவதற்கு பல விதங்களிலும் சிலர் முட்டுக் கட்டையாக இருப்பதால் இங்குள்ள பிரச்சனைகள், தேவைகளை சரிவரக் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் நாங்கள் எங்களுடைய பணிகளை ஆற்றி வருகின்றோம்.

இத்தகைய விடயங்கள் அவருக்கு புதுமையாக இருந்திருக்கக் கூடும். இதற்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்றும் மேரி ஜமஸிதா கேட்டிருந்தார். எங்களுடைய மத்திய அரசாங்கம் தனது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாகாண சபைகளுக்கு சில உரித்துக்கள் சட்டத்தின் படி கொடுத்திருக்கின்ற போது அந்த உரித்துக்களை அவர்கள் அனுபவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமே தவிர அவற்றினை தடை செய்து சீரழித்து முன்னேறவிடாமல் செய்வது ஜனநாயகத்துக்கு முரணான ஒரு செயல்.

எங்களுடைய கருத்துக்களை அதிகாரத்திலுள்ளவர்களிடம் தெரியப்படுத்தி நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது தொடர்பாக ஆராய்வதாகவும் மேரி ஜமஸிதா கூறினார் என முலமைச்சர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதேவேளை, மேரி ஜமஸிதாவிற்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று காலை இடம்பெற்றது. இச்சந்திப்பு வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts