Ad Widget

சொந்த நிலத்திற்காகவும் சுயாட்சிக்காகவும் போராடுவோம்! புத்தாண்டு வாழ்த்தில் சம்பந்தன் சபதம்!!

“கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக – கௌரவமாக – நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் என்று சித்திரைப் புத்தாண்டில் நாம் பிரார்த்திக்கின்றோம். அதுவரை நாம் ஓயாது போராடுவோம் என்றும் சபதம் எடுத்துக்கொள்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் ஆட்சி மாற்றத்தையும் அரசியல் தீர்வையும் எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்த மாதிரி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அனைவரையும் ஒன்றிணைத்து சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் நீதியைக் கட்டியெழுப்பக்கூடிய நல்ல சூழல் ஓரளவுக்கு வந்துள்ளது. இதனை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நல்லாட்சி முழுமை பெறவேண்டும் என்றால் வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும். சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றபோதிலும் அரசியல் தீர்வு சம்பந்தமான வாக்குறுதிகளுக்கு கால அவகாசம் வேண்டும் என்பது உண்மைதான்.

அதற்காக தீர்வு சம்பந்தமான விடயத்தை கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை.

அவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளினால் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். இந்நிலைமை இந்த ஆட்சியில் மாறவேண்டும். எதிர்வரும் வருடத்திற்குள் இந்நிலைமை மாறவேண்டும். மாறக்கூடிய சூழலும் இல்லாமல் இல்லை. இதனை அரசு புரிந்துகொண்டு செயற்படவேண்டும்” – என்றார்.

Related Posts