Ad Widget

சொந்த இடங்களை விடுவிக்காமையால் பச்சிலைப்பள்ளி மேற்கு மக்கள் சிரமத்தில்

சொந்த இடங்கள் விடுவிக்கப்படாமையால் பச்சிலைப்பள்ளி மேற்கு பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த 2000 ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி இரவு பளைப் பகுதியில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி மேற்கின் வேம்பொடுகேணி, இத்தாவில், இந்திராபுரம், முகமாலை போன்ற இடங்களைச் சேர்ந்த சுமார் 300 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியமர முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

போர் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் வெடிப்பொருள்கள் அபாயபலகைகளைப் பொருத்திவிட்டு உரிய அதிகாரிகள் ஏனோதானோ என்று இருக்கின்றனர்.

இத்தாவில் பிரிவின் ஒரு பகுதியில் மக்கள் மீளக் குடியமர்ந்த போது கடந்த ஓகஸ்ட் மாதம் வேம்பொடுகேணியின் நவுலாவெளி அம்பாள் ஆலயம் வரையுள்ள பகுதியில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் நான்கு மாதங்கள் சென்றும் இதுவரை எந்தவொரு மீள்குடியமர்வும் இடம்பெறவில்லை.

மாவட்டத்தில், பிரதேசத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் பேசினால் இன்னும் சில மாதங்களில் விடுவிக்கப்படுமென கடந்த மூன்று வருடங்களாகக் கூறுகிறார்களே தவிர, இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த தேவையான எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளவில்லை.

போர் வேளையில் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்த பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் வேம்பொடுகேணி பிரிவில் முழுமையாகவும், இத்தாவில், முகமாலை பிரிவுகளில் பெரும் பகுதிகளிலும் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்று கவலை தெரிவித்தனர் மக்கள்.

இந்தப் பகுதி மக்கள் விடயத்தில் கவனம் எடுப்பார் எவரும் இல்லையா என்றும் கேட்கின்றனர்.

Related Posts