Ad Widget

சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள்

மழைக்கும் வெயிலுக்கும் ஈடுகொடுக்க முடியாத தகரக் கொட்டில்களில் வாழும் தமது நிலை, அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையென கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணி உறுதியற்ற நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் பன்னங்கண்டி மக்கள், கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது மழை பெய்து வருவதால், தாம் தங்கியுள்ள கூடாரத்திற்குள் நீர் நிரம்புவதாகவும் அதனுள்ளேயே தானும் தன் கணவனும் வயது முதிர்ந்த காலத்தில் வாழ்ந்து வருவதாகவும் குறித்த தாய் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் தமது நிலை குறித்து சிரத்தை எடுப்பதில்லையென தெரிவித்த அத் தாய், ஒருமுறையேனும் தாம் வாழ்கின்ற சூழலை அரசியல்வாதிகள் வந்து பார்க்கவேண்டுமென்றும், தமக்கு காணி உறுதியுடன் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, யுத்த காலத்தில் முகாம்களில் தங்கியிருந்து பின்னர் மீள்குடியேற்றப்பட்ட தாம் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்வதாக தெரிவித்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.

Related Posts