Ad Widget

சையிட்டம் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு: யாழில் இருந்து பேரணி!

சையிட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சையிட்டம் எதிர்ப்பு மக்கள் அரணின் ஏற்பாட்டில் எதிர்ப்பு வாகன பேரணி யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட உள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, யாழ். முற்றவெளி திறந்த வெளியரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் வாகன தொடரணி புறப்பட்டு , பரந்தன் ஊடாக கிளிநொச்சி நகரை சென்றடையவுள்ளது.

கிளிநொச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்று மாலை முறிகண்டி விநாயகர் ஆலயத்தில் இறை வழிபாடு நடைபெற்று மாலை 5மணிக்கு வவுனியா நகரை வாகன பேரணி சென்றடையும்.

மறுநாள் புதன்கிழமை வவுனியாவில் இருந்து ஆரம்பமாகும் வாகன பேரணி அனுராதபுரம் ஊடாக சிலாபத்தினை சென்றடையும். வியாழக்கிழமை காலை சிலாபத்தில் இருந்து புறப்படும் வாகன பேரணி கொழும்பை சென்றடையும்.

வாகன தொடரணி செல்லும் பிரதான நகரங்களில் சையிட்டத்திற்கு எதிராக கையொப்பங்களும் சேகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை இன்று வவுனியா மாவட்ட வைத்தியர்கள் தவிர ஏனைய வடமாகாண வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வவுனியா மாவட்ட வைத்தியர்கள் நாளை புதன்கிழமை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

எனினும் இன்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை உள்ளடங்கலாக ஏனைய வைத்திய சாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவை மற்றும் டெங்கு நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என குறித்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Posts