Ad Widget

சைக்கிள்களை சோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை!!

அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தி தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான அறிவுறுத்தல்கள் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, பலரும் தற்போது சைக்கிள்களை பயன்படுத்தும் நிலையில், கடந்த கால தரவுகலுடன் ஒப்பீடு செய்து, விபத்து சம்பவங்கள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த புதிய திட்டம் அமுல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நடப்பு ஆண்டில் ( 2022) இதுவரை 1202 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களால் 96 சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

சைக்கிள்களில் பிரதான விளக்கு இன்மை அல்லது அது ஒளிரவிடப்படாமை, பின் பக்கத்தில் அடையாளப்படுத்தும் விளக்குகள் எவையும் இல்லாமை, இரவு நேரங்களில் ஓட்டுநர்கள் கடும் நிறங்களிலான ஆடைகளை அணிந்து பயணிப்பது, சமிக்ஞை விளக்குகளை கவனத்தில் கொள்ளாது பயணிப்பது, பாதைகளின் குறுக்காக பயணிக்கும் போது எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை உணராது பயணிப்பது போன்றன இந்த சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் சிக்க காரணங்களாக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கண்டறிய்பட்டதுள்ளது.

இந் நிலையிலேயே தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள பின்னணியில், சைக்கிள்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதுடன், இரவு நேரங்களில் பயணிக்கும் போது இளம் நிறங்களிலான ஆடைகளை அணிந்து பயணிப்பது, சைக்கிள்களில் பின் பக்கம் அடையாள விலக்குகளை பொருத்துவது போன்ற ஓட்டுநர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Related Posts