Ad Widget

சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவேண்டும் – முதலமைச்சர் சி.வி

மக்களுக்கான உன்னதமான சேவையை செய்யும் அரிய வாய்ப்பை இறைவன் தந்திருக்கின்றான். அதைக்கொண்டு உயிர் காக்கும் உன்னத பணியை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சுகாதாரத் தொண்டர்களாக நீண்டகாலமாக கடமையாற்றிய தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (19) கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாங்கள் ஒரு ஊழலற்ற அரசியலை மேற்கொள்ள விரும்புகின்றோம். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மக்களுக்கான உன்னத சேவையை செய்யும் அரிய வாய்ப்பை இறைவன் தந்திருக்கின்றார். அதைக்கொண்டு இந்த உயிர்காக்கும் உன்னத பணியை செய்யவேண்டும் என்றார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 251 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 133 பேருக்கும் இந்நிகழ்வில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன், சு.பசுபதிப்பிள்ளை, பசுபதி அரியரத்தினம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

மொத்தமாக 834 பேருக்கு வழங்கப்படவுள்ள இந்த நியமனக் கடிதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 101 பேரும், வவுனியா மாவட்டத்தில் 186 பேரும், மன்னார் மாவட்டத்தில் 163 பேரும் இன்னும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts