Ad Widget

செருப்புடன் சென்றவர்களுக்கு பிணை!

நல்லூர் வீதியில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன், இன்று செவ்வாய்க்கிழமை (23) அனுமதித்துள்ளார்.

நல்லூர் ஆலய சூழலில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிஸார், திங்கட்கிழமை (22) இரவு கைது செய்திருந்தனர்.

அவர்கள் இருவரையும் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆர்ப்படுத்திய பொலிஸார், குறித்த இரு இளைஞர்களும் நல்லூர் வீதியில் செருப்புடன் சென்றதாகவும், அவர்களை மறித்து ஆள் அடையாள அட்டையை கேட்ட போது அவர்கள் காண்பிக்க மறுத்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டினர்.

கைது செய்யப்பட்டஇளைஞர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உ.ரவிசங்கர், ஆலய நிர்வாகத்தினால் விதிக்கப்பட்ட ஒழுங்கு விதியினை சட்டமாக்கி, பொலிஸார் கைது செய்யலாமா? என மன்றில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து பதில் நீதவான் வழக்கினை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், இரு இளைஞர்களையும் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல அனுமதித்தார்.

Related Posts