Ad Widget

செம்மணி வெள்ளநீர்த் தடுப்பணை புனரமைப்புப் பணிகள் மாரிகாலத்துக்கு முன்பாக முழுமை பெறும் – ஐங்கரநேசன்

உப்பாறு நீரேரியில் சேகரிக்கப்படும் மழைநீரை செம்மணி வயல்களுக்குள் செல்லவிடாது தடுக்கும் வெள்ளநீர்த் தடுப்பணையைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும், புனரமைப்பு வேலைகள் யாவும் மாரிகாலத்துக்கு முன்பாக முழுமைபெறும் எனவும் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

01

வெள்ளநீர்த்தடுப்பணை நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாததால், கடந்த சில ஆண்டு மழைகாலத்தின்போது வெள்ளநீர் செம்மணி வயல்களை மூழ்கடித்ததோடு, உப்பாற்று ஏரியில் சேகரிக்கப்பட்டிருந்த மழைநீரையும் வீணாகக் கடலினுள் திறந்து விடவேண்டிய நிலையும்ஏற்பட்டது. தடுப்பணையை உடனடியாகப் புனரமைத்து தமது நெல்வயல்களை அழிவில் இருந்து பாதுகாத்துத் தருமாறு விவசாயிகளும், மழைநீரைக் கடலுக்குள் செல்லவிடாது தடுக்குமாறு சூழலியல் ஆர்வலர்களும் குரல் கொடுத்திருந்தனர். இவற்றைக் கருத்திற்கொண்டு வெள்ளநீர்த் தடுப்பணையைப் புனரமைக்கும் பணிகளை வடக்கு விவசாய அமைச்சு நீர்ப்பாசனத் திணைக்களத்தினூடாக வேகமாக முன்னெடுத்து வருகிறது.

வெள்ளநீர்த்தடுப்பணைப் புனரமைப்பு வேலைகளை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று செவ்வாய்க்கிழமை (08.09.2015) சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே மாரிகாலம் ஆரம்பிக்க முன்னர் புனரமைப்புப் பணிகள் முழுமைபெறும் என்று உறுதியளித்துள்ளார்.

04

இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

மழைநீரை வீணாகக் கடலினுள் சேரவிடாமல் உப்பாற்று நீரேரியில் தேக்குவதன் மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்த முடியும் என்ற நோக்கோடும், மழை வெள்ளம் நெல்வயல்களை நாசமாக்கக்கூடாது என்ற நோக்கோடுமே வெள்ளநீர்த்தடுப்பணை செம்மணியில் இருந்து கோப்பாய் வரை 4.2 கிலோ மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் போர்ச்சூழல் காரணமாகவும், கடந்த காலத்தில் பராமரிப்புப் பணிகளை உரிய தவணைகளில் மேற்கொள்ளாததாலும் தடுப்பணை மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. இதனாலேயே கடந்தகாலங்களில் நெல்வயல்கள் நாசமானதோடு மழைநீரையும் வீணாகக் கடலுக்குள் அனுப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

வெள்ளநீர்த்தடுப்பணையைப் புனரமைப்பதற்கு இப்போது 13.44 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் 10.14 மில்லியன் ரூபாவை மத்திய அரசின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வழங்கியுள்ளது. 3.3 மில்லியன் ரூபா வடக்கு விவசாய அமைச்சின் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. வேகமாகப் பணிகள் இடம்பெற்று வருவதால் எதிர்வரும் ஐப்பசிக்கு முன்பாகப் புனரமைப்பு வேலைகள் முழுமை பெற்றுவிடும். இதன்மூலம் செம்மணி விவசாயிகள் நன்மையடைவதோடு,நிலத்தடி நீர்வளமும் மேம்படும். அத்தோடு,உப்பாற்று நீரேரியில் நீர்தேங்கும் கால அளவும் அதிகரிப்பதால் இப்பகுதி நீர்ப்;பறவைகளின் சரணாலயமாகவும் மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts