செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு முன்னதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய மூன்று கட்டங்களாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு கட்டங்கள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின், போது மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மற்றும் என்புக்கூட்டுத் தொகுதிகளின் அறிக்கையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நிறைவில் 140 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் சிறார்களின் என்புக்கூட்டுத் தொகுதிகளும் காணப்படுவதுடன் சிறார்களின் ஆடைகள், பொம்மைகள், காலணிகள், புத்தகப்பை, பால் போத்தல்கள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.