Ad Widget

செப்ரெம்பரில் அறிக்கை திட்டமிட்டபடி வெளியிடப்படும் : வடக்கு முதல்வரிடம் ஐ.நா குழு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.

நான்கு நாள்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பை வந்தடைந்த ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து வடக்கு முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் வடக்கில் இருக்கக் கூடிய நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பில் இங்குள்ள நிலமைகளை அறியும் நோக்கிலேயே அவர்களது பயணம் அமைந்திருந்தது.

அரசியல் ரீதியிலான கேள்விகளையே எங்களிடம் தொடுத்து அது விடயத்திலேயே அறிந்து கொண்டார்.அத்துடன் இந்த நேரத்தில் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பிலான பிரேரணை கொண்டுவந்தமை தொடர்பில் கேட்டார்.

அதற்கு நான் பல காரணங்களைக் காட்டி தெளிவுபடுத்தினேன். ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை புதிய அரசுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமே . அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.

எனினும் ஒரு முறை மாத்திரமே பிற்போடப்பட்டுள்ளது. செப்ரெம்பரில் அறிக்கை வெளியிடப்படுவது உறுதி என தன்னிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts