Ad Widget

செப்டெம்பர் 10-16 வரை டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை யான ஏழு நாட்களும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலை சோதனையிட வரும் அதிகாரிகள் குழுவினருக்கு பூரண ஒத்து ழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை தேசிய ரீதியில் முதற் தடவையாக டெங்கு நுளம்பு பரவுவதற்கேற்ற சூழலை வைத்திருப்பவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்படுவதுடன் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் படுமென்றும் டெங்கு நுளம்பு கட்டுப் பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹசித்த திசேரா கூறினார்.

“டெங்கு நோய் தொற்றை மேலும் குறைத்துக் கொள்வோம்” என்னும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப் படவுள்ள விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்கண்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 10 ஆயிரத்தால் குறைவடைந் துள்ளது. அதேநேரம் கடந்த வருடம் 71 ஆகவிருந்த டெங்கு மரணம் இவ்வருடம் 30 ஆக குறைவடைந்திருப் பதாகவும் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால கூறினார்.

இந்நோய்க்கான அறிகுறிகள் ஆரம்பத்தி லேயே இனங்காணப்பட்டால் மரணத்தை தடுக்க முடியுமென நம்பிக்கை தெரிவித்த அவர், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும் எக்காரணம் கொண்டும் பெரசிட்டமோலை தவிர்ந்த வேறு வலிநிவாரணி அல்லது மாத்தி ரைகளை உட்கொள்ள வேண்டாமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இம் மாநாட்டில் கருத்து தெரிவித்த டாக்டர் ஹசித்த திசேரா இலங்கையில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், 2015 சர்வதேசத்தின் அவதானத்திற்குரிய ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இலங்கையில் இந்நிலை மையை கட்டுப்படுத்த முடியுமானால் எதிர்வரும் ஆண்டு டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கமளிக்கும் சர்வதேச மாநாடொன்று இலங்கையில் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி வாராந்தம் 250 தொடக்கம் 350 வரையான டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். மேல் மாகாணத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களி லிருந்தும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் கொழும்பு, மொரட்டுவை, தெஹிவளை, கல்கிசை ஆகிய பிரதேசங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, ஜா-எல, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் களுத்துறையில் பாணந்துறையிலும் டெங்கு நுளம்பு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் டெங்கு ஒழிப்பு வாரத்தில் 13 மாவட்டங்களில் அதிகூடிய அவதானம் செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 101 பிரதேச செயலகங்கள் அவதானம் செலுத்தப்படும் பிரிவாகவும் 220 பிரதேச செயலகங்கள் குறைந்த அவதானமுடைய பிரதேச செயலகங்களாகவும் மதிப்பிடப்பட்டு சோதனையிடப்படும்.

முப்படையினர். பொலிஸார். சிவில் பாதுகாப்பு படையினர், சுகாதார திணைக் களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை களுக்காக வீடு தோறும் வரவுள்ளனர். இவர்களுக்கென விசேட சீருடை மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட வுள்ளதனால் அவர்களை மலசலகூடம், சமையலறை, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட ஏனைய பகுதிகளை சோதனையிட அனுமதிக்க வேண்டு மெனவும் டாக்டர் திசேரா கேட்டுக் கொண்டார்.

Related Posts