Ad Widget

சூழல் பாதுகாப்பின் மைய விசையாக மாணவர்கள் செயற்பட வேண்டும் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (05.06.2015) உலக சுற்றுச்சூழல் தினவிழா முல்லை மாவட்ட கயட்டை மரக்காட்டில் நடைபெற்றது. முல்லை மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக, அளவுக்கு அதிகமாக நுகர்வதுதான் பூமி இன்று எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக உள்ளது.

இன்றைய உலக சனத்தொகை 7 பில்லியன். வளங்களை நுகருகின்ற கதி இப்போதுள்ளதைப் போன்றே தொடருமாக இருந்தால், 2050 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 9 பில்லியன்களை எட்டும்போது, வளங்களை வழங்குவதற்கு பூமியைப் போல மூன்று கிரகங்கள் தேவைப்படும். இதை அடிப்படையாகக் கொண்டே, ஐக்கியநாடுகள் சபை இந்த ஆண்டின் சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 7 பில்லியன் கனவுகள், ஒரு கிரகம், கவனத்தோடு நுகர்வோம் என்பதைத் தேர்வு செய்துள்ளது.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். சொட்டு நீரேனும் சிந்தாத வகையில் நீர்க்குழாய்களை மூடி வைப்பது, தேவையற்ற நேரங்களில் மின்குமிழ்களை அணைத்து வைப்பது, மோட்டார் வாகனங்களின் போக்குவரத்துக்குப் பதிலாக இயன்றவரை துவிச்சக்கரவண்டிகளைப் பயன்படுத்துவது, தனித்தனியாக மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதைவிட பேருந்து, தொடரூந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவது, வாரத்தில் இரண்டு, மூன்று தினங்களேனும் ஊன்உணவுகளைத் தவிர்த்து மரக்கறி உணவைப் புசிப்பது, ஒரு தாளின் இரண்டு பக்கங்களையும் எழுதுவதற்குப் பயன்படுத்துவது, பிளாஸ்ரிக் பைகளிற்கு விடைகொடுத்துத் துணிப்பைகள் அல்லது கடதாசிப் பைகளைப் பயன்படுத்துவது என்று நாங்கள் மேற்கொள்கின்ற சிறிய சிறிய விடயங்கள் கூட இயற்கை வளங்களை அதிக அளவில் பாதுகாக்க கூடியவை. இவற்றைச் சபதமாக எடுத்து நிறைவேற்றுவதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும். எல்லா மாணவர்களும் இணையும் போது சூழல் பாதுகாப்பில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சில், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் து.ரவிகரன், வைத்திய கலாநிதி சி.சிவமோகன், க.சிவநேசன் மற்றும் திணைக்களத் தலைவர்கள், ஆசிரியர்களோடு நூற்றுக்கணக்கான மாணவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

June-5- (1)

June-5- (2)

June-5- (3)

June-5- (4)

June-5- (5)

June-5- (6)

June-5- (7)

June-5- (8)

June-5- (9)

June-5- (10)

June-5- (11)

June-5- (12)

June-5- (13)

June-5- (14)

June-5- (15)

June-5- (16)

June-5- (17)

June-5- (18)

Related Posts