Ad Widget

சூளைமேடு கொலை: டக்ளஸின் மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது

KN-daklasகொலை வழக்கு தொடர்பாக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், வழக்கு விசாரணையில் காணொளி கான்ஃபரன்ஸிங் மூலம் ஆஜராவதற்கு அனுமதியும் கோரியுள்ளார்.

கடந்த 1986-ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி சென்னை சூளைமேட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் வழக்குரைஞர் திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர் மீது டக்லஸ் தேவானந்தா உள்பட பலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக சூளைமேடு பொலிஸார் டக்லஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது, 1993-ஆம் ஆண்டு டக்லஸ் தேவானந்தா தலைமறைவானார்.

இதனால், அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து, பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு வந்தால் எனது உயிருருக்கு பாதுகாப்பு இல்லை, அதனால், தன் மீதான வழக்கில் காணொளி கான்ஃபரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்கக் கோரி அமர்வு நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு டக்லஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை திரும்ப பெறக் கோரியும், வழக்கு விசாரணையில் காணொளி கான்ஃபரன்ஸிங் மூலம் ஆஜராவதற்கு அனுமதி கோரியும் டக்லஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

அமர்வு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 536 நாள்கள் தாமதமானதால், அதை ஏற்கும் படி கூடுதல் மனுவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வியாழக்கிழமை (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கால தாமதமாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை திரும்ப விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

Related Posts