சுவிட்ஸர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தைடைந்த ஈழத்தமிழர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்ஸர்லாந்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 9 தமிழர்கள் விஷேட விமானம் மூலம் நேற்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்நிலையில் அவர்களை நேற்றைய தினமே கைது செய்திருந்த ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தை சேர்ந்த 9 பேர் கடந்த நான்கு மாதங்கள் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை சுவிட்ஸர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரி தங்கியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளை இவர்கள் மீறியதாக கூறப்பட்ட நிலையிலேயே 9 பேரும் ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த சுவிட்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.
இந்த உடன்படிக்கைக்கு அமைய சுவிட்ஸர்லாந்தில் இருந்த நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடுகடத்தபட்ட ஒன்பது பேரில் கிளிநொச்சியை சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிராஜா நிரோசன், புங்குடுதீவை சேர்ந்த ரஜீவன், இணுவிலை சேர்ந்த லிந்துதாஸ், யாழப்பாணத்தை சேர்ந்த பாலசுதன், பருத்தித்துறையை சேர்ந்த காண்டீபன் மற்றும் சிவநேசன் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம்கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.