Ad Widget

சுற்றுலா மையங்களை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்

“வடமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இரானுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்” என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.

வடமாகாண சுற்றுலா மையம் நேற்று மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“2010ஆம் ஆண்டு போர் முடிந்துவிட்ட பின்பு ஊரை பார்ப்பதற்காக இந்த வீதி வழியாக கூட்டிக்கொண்டு வந்தார்கள் இராணுவத்தினர். அப்போது இங்கிருக்கின்ற அதிகாரிகள் சிலரும் என்னுடன் வந்தனர் அந்த நேரத்திலே கட்டடங்கள் பல இருக்கவில்லை. கிளிநொச்சி நகரிலே சில கட்டடங்கள் இருந்தன.

அதன் பின்னர் ஒரு வருடத்துக்கு பின்னர் மீண்டும் மீள்குடியேற்றம் வருகின்றபோது, அந்த இருந்த ஒருசில கட்டடங்களையும் காணவில்லை. இப்பொழுது வரலாற்று ரீதியாக அதை நாங்கள் தேடுகின்றோம்.
பார்க்கவிடும்போது இருந்த கட்டடங்களை எல்லோரும் படம் எடுத்தார்கள். பத்திரிகையாளர்களும் வந்தார்கள். அவர்களும் படம் எடுத்தார்கள். இப்போது அந்த படங்களை தாருங்கள். அந்த பழைய கட்டடங்களை யார் உடைத்தது என்பதை அறியலாம் என்றால், இப்போது அதை எடுக்க முடியாதுள்ளது.

இந்த நாட்டிலே இந்த போரின் பின்னர் படிப்படியாக எமது பிரதேசத்தை கட்டிஎழுப்பிவருகிறோம். அந்தவகையில், சில கடமைகளை நாங்கள் செய்கின்றோம். வடமாகாணத்திலே சுற்றுலாத்துறையை நன்றாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காக இதை அமைத்திருக்கிறார்கள்.

தற்போது வடக்குக்கு வருகின்ற சுற்றுலா பயனிகள் யாழ்ப்பாணத்துக்கு சென்றுவருகின்றனர். ஏனைய பகுதிகளிலுள்ள இடங்களில் சென்று அவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்படவில்லை.

காங்கேசன்துறையிலே ஒரு பகுதி இவ்வாறு வடமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு வடமாகாண சுற்றுலாத்துறையை விருத்தி செய்வது. இதை கதைத்தால் இங்கு சிலர் அரசியல் பேசுவதாக கூறுவீர்கள்.

அதேபோல், சில பழமைவாய்ந்த கோட்டைகள் உடைக்கப்பட்டு கோட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், கௌதாரிமுனையிலே போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட புகைக் கூடு ஒன்று உள்ளது. அந்தப்பகுதி ஒரு மணல் மேடு. இதேபோல் மணல்காட்டிலே மணல்புட்டி இருந்தது. அது அழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாவகச்சேரியில் இருந்த ஒரு மணல் புட்டி அழிக்கப்பட்டுள்ளது. கௌதாரிமுனையிலே இயற்கையாகவே குவிக்கப்பட்ட மணல் புட்டி அதுவும் அரசியல் தலையீட்டுடன் அள்ளிச்செல்லப்பட்டுள்ளது.

இதேபோல் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்ற ஆனையிறவு சுண்டிக்குளம் போன்ற பிரதேசங்கள் இவ்வாறு பல சுற்றுலா மையங்கள் எமது வடமாகாணத்திலே உள்ளது. அவற்றை பயன்பாட்டுக்கு மாற்றுவதிலே பல சிக்கல்கள் காணப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts