Ad Widget

சுயலாப அரசியலுக்கு பல்கலை மாணவர்கள் பயன்படுத்தியோர் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் – ஈபிடிபி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை சீர்குலைத்து, மாணவர்களை கையாலாகாத உணர்ச்சியூட்டல்களால் திசைதிருப்பி, தங்களது சுயலாப அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தி வருகின்றவர்கள், இன்று யாழ்.பல்கலைக்கழக செயற்பாடுகள் குறித்து நீலிக்கண்ணீர் வடிப்பது நகைப்பிற்குரிய விடயமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘சுயநல அரசியல் செயற்பாடுகளை இனங்கண்டு, பல்கலைக்கழக சமூகத்தால் தூர ஒதுக்கப்படுகின்ற இந்த சுயலாப அரசியல்வாதிகள், இன்று ஒதுங்கி நின்று முனுமுனுத்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு தேடல்கள் பற்றி அறிவுரை கூறும் இந்நபர்கள், வெளியிடும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மாணவர்கள் தங்களது தேடல்களாகக் கொண்டால் அம்மாணவர்களது நிலை என்னவாகும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

கற்றல் செயற்பாடுகளிலிருந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை வேறுபடுத்தி, அழிவுக்குப் பலி கொடுத்து வந்த நிலைமை மாற்றப்பட்டு, இன்று யாழ்.பல்கலைக்கழகமானது நல்லதொரு நிலையில் சுயமாக இயங்கி வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பதை புத்திஜீவிகள் நன்கறிவர். அதுமட்டுமல்லாது வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு பௌதீக வளங்களையும் அமைச்சர் பெற்றுக்கொடுத்து வருகிறார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களையும் கட்டிடங்களையும் தங்களது குறுகிய அரசியலுக்கு மாத்திரம் பயன்படுத்திவிட்டு தூர ஒதுங்கி விடும் இந்நபர்கள், அழிவை நோக்கியே சிந்திப்பதால் அமைச்சர், மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து தெரியாதவாறு நடிக்கின்றனர்.

பல்கலைக்கழக மூதவையில் அங்கம் வகிப்போர் குறித்து தெளிவில்லாத நிலையில் முனுமுனுக்கும் இவர்கள், தாங்கள் யார்? என்ன செய்தோம்? எங்கே இருக்கின்றோம்? என்பவை பற்றி சிந்தித்து முனுமுனுப்பது நல்லது.

எமது மக்களை ஏமாற்றி, அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு துரத்தியவர்கள் தொடர்பிலும் எமது மாணவர்கள் தேடல்களை மேற்கொண்டால் டிஸ்கவரி சேவையில் காட்டப்படும் மிருகங்களைவிட படு மோசமான மனித மிருகங்களின் செயற்பாடுகளை அறிந்துகொள்ள முடியும்’ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts