Ad Widget

சுயலாப அரசியலுக்காக எதையும் கதைக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணுகிறது -டக்ளஸ்

எமது மக்களின் நலன்கருதிய வாழ்வாதார உதவிகளுக்கு எவரேனும் இடையூறுகளை விளைவித்தாலோ அன்றி அதற்கு ஏதேனும் தடைகள் இருந்தாலோ அவற்றைத் தகர்த்தெறிந்து விட்டு எமது மக்களின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதேதனது நோக்கமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

1

யாழ்.மாவட்ட பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திக்கம் வடிசாலையை சர்வதேச தரமிக்க உற்பத்திச் சாலையாக மாற்றி அதன் வருவாயை அதிகரித்து அதன் மூலம் அதுசார்ந்த சமூகத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சில விஷமிகள் பொய்யான புரளிகளைத் கிளப்பி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், இத்துறைசார்ந்த சமூகத்தின் அதீத அக்கறை காரணமாக இத்துறையை வளர்த்தெடுக்க முழு முயற்சிகளையும் தான் மேற்கொண்டு வருவதையும் உணர்த்தினார்.

தனது அமைச்சின் கீழுள்ள பனை அபிவிருத்திச் சபைக்குரிய திக்கம் வடிசாலையின் உற்பத்திகள் ஏனைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்திகளுடன் போட்டியிட இயலாத தரத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதனால் அவற்றின் சந்தைவாய்ப்பு குறுகியதாக உள்ளதுடன் விலையும் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே, இவ்வுற்பத்தியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு அமைவாக உயர்த்தும் நோக்கிலேயே வடிசாலை நவீனமயப்படுத்தப்படுகிறது.

அதுவரையில் இங்கு பணியாற்றி வந்துள்ள அனைத்து பணியாளர்களுக்குமான ஊதியம் எனது கட்சி நிதியிலிருந்தே வழங்கப்படுகிறது.

திக்கம் வடிசாலை பற்றி இன்று தங்களது சுய விளம்பரங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்போர் இச் செலவீனங்களை ஏற்கத் தயாராக இல்லை.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த செலவீனங்களை ஏற்கத் தயாரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நேரிலேயே கேட்டபோது அவர்கள் மௌனம் சாதித்து விட்டார்கள்.

இப்படியானவர்கள்தான் தங்களது சுயவிளம்பரங்களுக்காக பொய்யானதும் தவறானதுமான கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

தங்களது சுயலாப அரசியல் காரணங்களுக்காக எதையும் கதைக்கலாம் என இவர்கள் எண்ணுகின்றனர்.

தென்பகுதியில் இருந்து போத்தல்கள் இப்பகுதிக்குக் கொண்டுவரப் படுவதாக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தவறான விடயமொன்றைக் கூறியிருக்கிறார்.

அதுவும், பாராளுமன்றத்தில் நானில்லாத சமயம் பார்த்து இவர் கதைத்திருக்கிறார். இதற்கான பதிலை நான் பாராளுமன்றத்தில் கூற இருக்கிறேன்.

இத்துறைசார்ந்த எமது மக்களின் நலன்கருதி தென்பகுதியிலிருந்து இப்பகுதிக்கு போத்தல்கள் கொண்டு வரப்படுவது இப் போத்தல்ல, மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நிறுத்தப்பட்டுள்ளது என்பதை இவர் அறியாதிருப்பது துரதிஷ்டமாகும் எனவும் அமைச்சர் அவர்கள் இங்கு மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம், தென்பகுதியில் இருந்து யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு போத்தல்கள் கொண்டு வரப்படுவதில்லை என்பதை மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் திரு கிறிஸ்ரி ரோசர் அவர்களும் மாவட்ட கூட்டுறவுப் பணிப்பாளர் திரு அருந்தவநாதன் அவர்களும் உறுதி செய்தனர்.

அத்துடன், இன்றைய தினம் சில கள்ளுத்தவறணைகளை இடமாற்றுதல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.

பனங்கள் போத்தலிடப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பிலும் அவதானஞ் செலுத்தப்பட்டதுடன் இதற்கென தனது அமைச்சினூடாக மானியங்களை ஒதுக்க இயலுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

பனஞ் சாராயத்தை தென்பகுதிக்கு கொண்டு செல்வது தொடர்பிலும் விசேட அவதானங்கள் செலுத்தப்பட்டன.

2

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு. பசுபதி சீவரத்தினம், பொதுமுகாமையாளர் திரு. முகாமையாளர் திரு. லோகநாதன், பிரதேச செயலர்கள், பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி

திக்கம் வடிசாலை அதிகாரப்பிடிக்குள் சீரழிகின்றது – சிறிதரன்

Related Posts