Ad Widget

சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு – அங்கஜன்

DSC04037தேசியம் பற்றியும் சுயநிர்ணயம் பற்றியும் சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு. செய்ய வேலையற்று, சரியான பாதையை காட்ட யாரும் அற்று தெருவில் நிற்கிறது நம் நாளைய சந்ததி. இவர்களை கலாசார சீரழிவாளர்களாக காட்ட முயல்வதை விடுத்து காலத்தின் தூண்களாக மாற்ற வேண்டியது நாம் அல்லவா? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 16.09.2013 மூளாய், பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியிருந்தார்.

இதில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த நான்கு வருட கால என் அரசியல் பயணத்தில் மக்களோடு மகனாக, சகோதரனாக கைகோர்த்து நடந்திருந்தேன். என் இனத்தின் கண்ணீரைத் துடைக்க முயன்றிருந்தேன். எமக்கான தாயகம் சுயநிர்ணயம் சுயாட்சி பற்றிய எனது பார்வை பற்றி சரியாக தெரியாதவர்கள் பலர் நான் சொல்லும் அபிவிருத்தி பற்றி கேலி பேசலாம். பாலங்கள் கட்டுவதையும் வீதிகளை போடுவதையும் அபிவிருத்தியாக காட்ட முனைகிறார்கள். உண்மை அதுவல்ல நான் பேசுகிற அபிவிருத்தி தனி மனித அபிவிருத்தி. என் இனத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் முன்னேற வேண்டும். தன்னை வளப்படுத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்குபவனாலேயே சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல சமூகங்கள் பல சேர்ந்ததுதான் நல்லதொரு இனமாகலாம்.

இதுவரை காலமும் எமக்கான உரிமைகளுக்கு போராடினோம். அடிப்படை உரிமைகளை மறுத்து அரசியல் உரிமைக்களுக்காக களமாடினோம். அந்த அரசியல் உரிமைகளை அடைந்திருந்தால் அதனூடே எம் அடிப்படை உரிமைகளை கட்டியெழுப்பியிருப்போம் , ஆனால் நடந்தது அதுவன்று. மேய்ப்பவன் அற்ற மந்தைகளாக கூட்டம் கூட்டமாக சிதறிக் கிடக்கிறோம். இந்த நிலையில் எமது அடிப்படை உரிமைகள் பற்றியும் அக்கறையில்லாமலும் , அலட்சியமாகவும் இருப்போமாகில் இனி வரும் காலங்கள் எம் எதிர்காலம் சூனியமாகிவிடும், எமக்கான அரசியல் உரிமை பற்றிய சிந்திக்கவே முடியாத ஒரு சமூகம் உருவாக விட்டவர்கள் நாமென்றாகி விடுவோம். எனவேதான் இன்றோ நாளையோ எம் அரசியல் உரிமைகளைப் பெற்று விடலாம் என்று எம் சமூகத்தை ஏமாற்றாமல் வரும் காலங்களில் தானும் நமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளக்கூடிய சமூகமாக வளர்க்க வேண்டியது நம்முடைய கடமையல்லவா ? இருக்கிற வரையில் கிடக்கிற வழிகளில் எல்லாம் போராடுவோம் எமது இறுதி இலக்கை அடையும் வரையில் போராடுவோம்.

தேசியம் பற்றியும் சுயநிர்ணயம் பற்றியும் சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு. செய்ய வேலையற்று, சரியான பாதையை காட்ட யாரும் அற்று தெருவில் நிற்கிறது நம் நாளைய சந்ததி. இவர்களை கலாசார சீரழிவாளர்களாக காட்ட முயல்வதை விடுத்து காலத்தின் தூண்களாக மாற்ற வேண்டியது நாம் அல்லவா? கிடைக்கிற வேலைகளை சலுகை என்று தட்டிவிட்டு நம் சந்ததியை நாமே அழிவுப்பாதையில் தள்ளுவதா? எமது சமூகம் கல்வியால் உயர்ந்த சமூகம், கல்விச் சிறப்பால் பாரெங்கும் பரந்த இனம். இன்று நாம் வேண்டாம் என்றால் எமக்கான வேலை வாய்ப்பை எவனோ எடுத்துப் போகிறான். யாழ்ப்பாணத்திற்க்கு வேலை செய்கிறேன், சேவை செய்கிறேன் என்று வெளியிருந்து வருகிறான். கண்டவனிடன் கையேந்தும் நிலைக்கு என் இனம் வந்திருக்கிறது. படித்த ஒரு இளைஞனாக கல்வியின் மகத்துவம் நன்கறிந்தவன். என் இனத்தின் தகுதி உயர்ந்த வேண்டும் அதற்கு எனக்கிருக்கும் சிறந்த வழி இன்றைய சிறார்களை நாளை நல்ல கல்விமான்களாக ஆக்குவதாகும். அதற்காக நான் எடுத்த முயற்சி சிறுவர் அபிவிருத்தி திட்டங்களாகும்.

எம் சனம் நாளை சுயமாக சிந்திக்கும், செயற்படும் ஒரு நல்ல இனமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் எனக்கு வாக்களியுங்கள். இல்லையேல் நம்மினத்தை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல வழி வகுத்தவர்கள் நாமே என்று எதிர்கால சந்ததியினருக்கு பதில் சொல்ல தயாராக வேண்டியிருக்கும். நினைத்ததை நடத்த துணிந்த, துடிப்புள்ள, இளைஞனாக உங்கள் முன்னே நான் நிற்கின்றேன். நல்லதொரு அரசியலை, நேர்மையான அரசியலை, மக்களுக்கான அரசியலை அங்கீகரிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

Related Posts