Ad Widget

சுமந்திரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் காட்டம்

போர் குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக கூறப்படும் கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐ.நா.விசாரணையாளர்களின் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும், ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கு கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்து தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்…

‘’ஐ.நா.விசாரணையாளர்கள் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம்’  எனவும் ‘ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்சையின்கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம்’ எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆனால் இவ்வாறான முடிவுகள் எடுப்பதற்கான எந்தக் கலந்துரையாடலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ நடத்தப்படவில்லை. சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தல்ல என்பதுடன் இது அவரின் சொந்த தனிப்பட்ட கருத்து என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

சுதந்திரதின விழாவில் கலந்துகொள்வது என்பதிலும் அவர்கள் தனிப்பட்ட முடிவையே எடுத்தார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்வதென்பதும், ஐ.நா. சிறீலங்காவிற்குள் வந்து விசாரணைகளை நடத்த வேண்டுமென்பதும் விசாரணையின் காலத்தை நீடித்து ஐ.நாவிற்கான அறிக்கையை வெளியிடாமல், காலதாமதம் ஆக்குவதற்கான உத்திகளே. இவ்வாறான உத்திகளை கையாள்வதென்பது ஒருவருடகாலம் விசாரணை செய்து உருவாக்கப்பட்டு வருகின்ற மார்ச் மாதம் வெளிவருகின்ற அறிக்கையை வெளியிடாமல் தடைசெய்வதற்குச் சமனானதாகும்.

இது மார்ச் மாதம் வெளியிடப்படாமல் காலதாமதப் படுத்தப்பட்டால் பின்னர் எப்பொழுது வெளியிடப்படும் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் கிடையாது. இந்த விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது ஒரு வருடத்திற்கு மாத்திரமே போதுமானது. இந்த விசாரணை நீடிக்கப்படவேண்டுமாக இருந்தால் நிதியாதாரங்கள் கிடைக்காதென்பதும் இதற்கான நிதியை வழங்குவதற்கு உறுப்பு நாடுகள் முன்வருவார்களா என்பதும் தெளிவற்ற விடயங்களாகவே இருக்கின்றது.

2014ஆம் ஆண்டு இவ்விசாரணைக்கு நிதியில்லை என்ற காரணத்தைக் காட்டி, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன. ஆனாலும் அன்று பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று சர்வதேச விசாரணை முடிவுற்று மார்ச் மாதம் அதன் அறிக்கை வெளியிடவுள்ள சூழ்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜூன் மாதம் அதற்கான தேர்தலை நடத்த இருப்பதால் அதற்கு முன்னதாக மார்ச் மாதம் இவ்வறிக்கை வெளியிடப்பட்டால் மஹிந்த ராஜபக்‌ஷ அந்த அறிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார். ஆகவே இதனைத் தாமதப்படுத்த வேண்டும் என்பதே இப்பொழுது முன்வைக்கப்படும் வாதமாகும். இது அர்த்தமற்றதோர் வாதமாகும்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா கலைக்கபடாதா? தேர்தல் எப்பொழுதுவரும்? 2015 இலா அல்லது 2016 இலா என்பதெல்லாம் கேள்விகளாகவே உள்ளன. இந்நிலையில், நடக்குமா நடக்காதா என்ற தேர்தலுக்காக விசாரணை அறிக்கையை ஒத்திப்போட இணங்குவதென்பது எம் தலையில் நாமே மண்ணை அள்ளிக்கொள்வதற்குச் சமமாகும். தேர்தல் பிற்போடப்படுமாயின், மார்ச்சுக்கு வெளிவராத விசாரணை அறிக்கையானது, செப்ரெம்பருக்கும் வெளிவராமல், பின்னர் 2016 மார்ச்சுக்கும் வெளிவராமல் போகலாம். தேர்தலோடு சர்வதேச அறிக்கையை தொடர்புபடுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே விசாரணை அறிக்கையை வெளியிடாமல் காலத்தை நீடிப்பதும் ஒத்திப்போடுவதும் நிரந்தரமாகவே சர்வதேச விசாரணை அறிக்கைக்கு மூடுவிழா செய்வதற்குச் சமனானது.

உள்ளூர் விசாரணை என்பது காலத்தை இழுத்தடிக்கும் செயலேயன்றி வேறெதுவும் இல்லை. இதற்கு முன்னர் உள்ளூர் விசாரணைக்கு ஏற்பட்ட கதியை மக்கள் அறிவார்கள். ஆகவே உள்ளூர் விசாரணை என்பதும் தமிழ் மக்களை ஏமாற்றி சர்வதேச விசாரணை அறிக்கையை ஒழிக்கின்ற செயற்பாடாகும். இவ்வாறான அறிக்கைகளை சுமந்திரன் ஏற்றுக்கொள்வதென்பது அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும். இத்தகைய செயற்பாட்டினை கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய அங்கத்துவக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளாது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Posts