Ad Widget

சுமந்திரன் பதவியை இராஜினாமாச் செய்து அரசியல் பயிற்சி பெறவேண்டும் -ஆனந்தசங்கரி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு அரசியல் பயிற்சி பெறுவதற்குச் சென்று வர வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளார் வீ.ஆனந்தசங்கரி நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனடா வானொலி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளார்கள் கேள்வி எழுப்பினார்கள்.அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக சுமந்திரன் கூறியிருப்பதைச் சாதிக்க முடிந்தால் சாதித்துக் காட்டலாம்.

மக்களை மீறியா? முதலமைச்சரை கட்சியில் இருந்து நீக்கப் போகிற அளவிற்கு அவருக்குச் சக்தி இருக்கா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகியவர். முதலில் அவரை நிராகரித்தார்கள். பின்னர் தெரிவு செய்யப்பட்டவர். வடமாகாண முதலமைச்சர் தீவிரமான போக்கினைக் கடைப்பிடிக்க முடியுமென்றால் கடைப்பிடிக்கலாம்.
சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு எங்கு சரி பயிற்சிக்குச் சென்று வந்தால் அது நல்ல விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் அனுபவம் இல்லை. முன்னோக்கிச் செல்வாராக இருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வேலையற்று இருந்தவர்கள் என்றும் அன்று கூறியபோது சுமந்திரனைத் தூக்கி வெளியில் எரிந்திருக்க வேண்டும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கின்றார். எந்தெந்தச் சிங்களவர்கள் யுத்தக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்படுகின்றார்களோ சுமந்திரனின் சாட்சியத்துடன் வழக்கு நிறைவடைந்து விடும் என்று கூறியிருக்கின்றார்கள்.
அத்துடன் எமது தரப்பினரும் கொலை செய்துள்ளார்கள். அரசாங்கமும் கொலை செய்துள்ளார்கள்.

சாட்சியங்களைத் திசை திருப்பும் வகையில் சுமந்திரனால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதா அல்லது சுமந்திரனின் அறியாமையினால் செய்யப்பட்டுள்ளதா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றார்.

புலம்பெயர் மக்களில் ஒரு சிலர் அனுப்பிய பணத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இங்குள்ள பொருளாதாரத்தினைச் சிதைத்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தற்போது தலைகீழாக நிற்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரித்து வந்தார்கள் என்று கூறிவந்தார்கள்.

ஆனால் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது தாங்கள் எனத் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தங்கன் என்பவரின் கட்டளைக்கு அமைவாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்கள்.

தன்னலத்திற்காக இலங்கை தமிழரசுக் கட்சியினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டு வந்து இணைத்து விட்டு தமிழ் விடுதலைக் கூட்டணியைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன. ஏன் பெரும் தலைவர் வாய் மூடிக்கொண்டு இருக்கின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

Related Posts