Ad Widget

சுமந்திரன் எம்.பியை கொலை செய்ய மீண்டும் முயற்சி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவ புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கி 4 நாள்களுக்குள் கிளைமோர் குண்டு மற்றும் அதனை மறைந்திருந்து இயக்கும் கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியை செலுத்திவந்தவரும் மற்றொருவரும் தப்பி ஓடிவிட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வீதிச் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கர வண்டியை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது, அதன் சாரதியும் மற்றொருவரும் தப்பிஓடிவிட்டனர். முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதற்குள்ளிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் கூறியிருந்தனர்.

முச்சக்கர வண்டி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என நான்கு தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸாருக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலேர்ட்) விடுத்திருந்தது.

அதுதொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உஷார்ப்படுத்தப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடியுடன் கிளைமோர்க் குண்டும் மீட்கப்பட்டுள்ளன. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் அவை எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முச்சக்கர வண்டி சோதனை நடத்தப்பட்ட இடத்துக்கு அண்மையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்று பொலிஸ் உயர்மட்டம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 5 பேர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான வழக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts