சுமந்திரன் எம்.பியின் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.வட்டுக்கோட்டை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் தனுஷன் அமலன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.

சந்தேக நபர்களின் சார்பில் வாதாடுவதற்காக, யாழ். மேல் நீதிமன்றத்துக்கு நேற்றும் இன்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

இன்று, யாழ். மேல் நீதிமன்றத்துக்கு சுமந்திரன் சென்ற போது, அவருடைய வாகனத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்ததுடன், நீதிமன்ற கட்டட தொகுதிக்கும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தமை காணக்கூடியவாறு இருந்தது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்மீது கடந்த மாதம் 13ஆம் நாள் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்படவிருந்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட மேல்நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னர், கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சந்தேக நபர்கள் அரசியல்வாதியொருவரை படுகொலை செய்வதற்கு முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சுமந்திரனே இலக்குவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முன்னாள் போராளிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கொலை முயற்சி, தீர்வைக்கண்டு அஞ்சுபவர்களின் செயலாக இருக்கலாம் ; சுமந்திரன்

சுமந்திரனைப் படுகொலை செய்ய சதி ; நான்கு முன்னாள் போராளிகள் கைது!

Related Posts