Ad Widget

சுமந்திரனைப் படுகொலை செய்ய சதி ; நான்கு முன்னாள் போராளிகள் கைது!

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு முன்னாள் போராளிகளை கைது செய்த கிளிநொச்சி பொலிஸாரிடம் இதுதொடர்பாக, தி ஹிந்து விசாரணை மேற்கொண்ட போது, இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவே கையாள்வதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. அதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான- தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டத்தரணி ஒருவர், கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளதுடன் சில விபரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பங்கேற்கவிருந்த நிகழ்வு ஒன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்ட சுமந்திரன், ‘பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை ரத்து செய்யவில்லை அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன.

ஜனவரி 13ஆம் திகதி படுகொலை முயற்சி ஒன்றுக்கு தயாராக இருந்தார்கள் என்றும் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டேன்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் வாழ்வதற்காக போராடுகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம்.

அத்தகைய உதவிகள் கிட்டாத போது, அரசியல் நோக்குடன் செயற்படுவோரினால் அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுமந்திரனை டிசம்பர் 12 ஆம் திகதி மற்றும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதிகளில் தாளையடி- சோரன்பற்று வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி கொலை செய்ய நடவடிக்கை தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், எனினும் குறிப்பிட்ட நாள்களில் சுமந்திரன் அந்தப் பாதையால் பயணிக்காததால் அவர் தப்பியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts