Ad Widget

சுமந்திரனுக்கு வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்ள காலம் கனிந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சுமந்திரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்வதற்கு காலம் கனிந்துள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்தி, இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு கிழக்கில் பெரும் ஆதரவுடன் இவ்வரசாங்கம் எவ்வாறு வந்திருந்ததோ, அதே போன்றுதான் மலையக மக்களும் அதரவு வழங்கியிருந்தனர். ஆனால் இன்று நல்லாட்சி அரசாங்கம் நிலைதடுமாறி ஒரு நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆகவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் இன்று மகிந்த ராஜபக்ஷ பிரதமராக வருவதற்கு முக்கிய காரணம், நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே ஆகும்.

இந்நிலையில் சுமந்திரன் போன்றோர் அரசியல் தீர்வு வராவிடிவின் அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்குவதாக தெரிவித்திருந்தார். ஆகவே அதனை நிறைவேற்றிக்கொள்ள இதுவே சிறந்த தருணமாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இப்புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக சொன்ன சுமந்திரன், இவ்வரசாங்கம் பிளவுபட்டு போய்யுள்ள நிலையில் அவருடைய வாக்கினை நிறைவேற்றி கொள்ளும் முகமாக அரசியலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

இதேவேளை எங்களுடைய மத்திய குழு கூடி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக ஆராயவுள்ளது. எங்களை பொறுத்தவரை இந்த இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் மக்களுக்கு கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஒரு கால கட்டத்திலேயே உள்ளது.

ஆகவே இவர்களிற்கு நிபந்தனை விதித்தோ, விதிக்காமலோ எதையும் செய்யப்போவதில்லை.

குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைப்பதற்காகதான் இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை சம்மந்தன் வழங்கி வந்தார். ஆனால் இன்று அவருடைய எதிர்க்கட்சி பதவியும் பறிபோயுள்ளது. இந்நிலையில் எமது மத்திய குழுவும் இவ்விடயம் தொடர்பில் முடிவெடுக்கவுள்ளது” என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Related Posts