Ad Widget

சுமந்திரனின் கருத்து எம்மை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வைக்கும்: தமிழீழ விடுதலை இயக்கம்

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால் கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், அதன் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் ஆதரித்து நிற்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.

போர்க்குற்ற விசாரணைக்கு கோரப்படும் இரண்டுவருட கால அவகாசத்தை ஆட்சேபித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்திற்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்திருக்கும் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரின் அரசியல் விவேகத்தை கேலி செய்யும் விதத்திலும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனால் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமன்றி, இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தைக் கூட்டி முடிவு எதுவும் எடுக்காமால், கூட்டமைப்பின் பெயரில் மிக பாரதூரமான ஒரு நிலைப்பாடு முன்வைக்கப்பட்டிருப்பது, கூட்டமைப்பின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

யுத்தத்தின் கோர வடுக்களைச் சுமந்து நிற்கும் நிலையிலும் துவண்டுபோய் விடாமல், அரசியல் நீதியை தொடர்ந்து கோரி நிற்கும் தமிழ் மக்களின் சார்பில்செயற்பட்டு வந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் பேரத்திற்கும், சந்தர்ப்பவாத, திரைமறைவு உடன்பாடுகளுக்கும் பலியாகத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஆயினும், கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் கருத்துக்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாகவும் சர்வாதிகாரத் தோரணையிலும் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் பெயரில் தொடர்ந்து செயற்படப் போகின்றது என்றால், அதனை கூட்டமைப்பின் எதிர்கால நலன் கருதி, ஒரு அரசியல் சவாலாக எமது கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

கூட்டமைப்பு என்பது அதில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியினதும் தனிச்சொத்து அல்ல. தமிழ் மக்கள் அளித்த ஆணைக்கு அமைவாக எந்தவொரு கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ கூட்டமைப்பின் கொடியின் கீழ் செயற்பட முடியவில்லை என்றால், அவர்களுக்கான உரிய வழிக்காக கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன என்பதனை அழுத்தம் திருத்தமாக எமது கட்சி சொல்லி வைக்க விரும்புகின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவராகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து தமிழரசுக் கட்சிக்குள் இருந்து முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய விரோத நடவடிக்கைகளை இனிமேலும் அனுமதித்துக்கொண்டிருக்க கூடாது என்பதையும் எமது கட்சி தெரிவித்துக் கொள்கின்றது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts