Ad Widget

சுமந்திரனின் அழைப்பு தொடர்பில் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருடன் ஈபிடிபி தர்க்கம்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில், தேர்தல் திணைக்களத்திலிருந்து வந்திருந்த தொலைபேசி அழைப்பினை சுமந்திரன் எடுத்திருந்தார்.

இந்தநிலையில் அது முறைகேடு என ஈ.பி.டி.பி குழப்பம் விளைவித்ததுடன் அரசாங்க அதிகாரி ஒருவரின் சட்டையை பிடித்து கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் வேட்பாளருமான சுமந்திரனிடம் கேட்டபோது,

ஈ.பி.டி.பி தனது அரசியல் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு, மக்களுக்கு தங்கள் முகத்தை இறுதியாக காண்பிப்பதற்காக ஒரு நாடகத்தை ஆடினார்கள்.

உண்மையில் நடைபெற்றது என்னவென்றால் தேசிய பட்டியலை நாம் தேர்தல் ஆணையாளருக்கு இன்றைய தினம் 12 மணிக்கு முன்னதாக வழங்கியிருக்க வேண்டும். அதற்கமைய நாங்கள் தொலைநகர் (பக்ஸ்) ஊடாக அனுப்பியிருந்தோம்.

ஆனால் அது அவர்களின் கவனத்திற்கு வந்திருக்காத நிலையில் மீண்டும் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தார்கள். ஆனால் என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி ஓய்வு நிலையில் இருந்தமையினால் தேர்தல் திணைக்கள தொலைபேசிக்கு அழைப்பை எடுத்து, நான் இருக்கிறேனா? என வினவியதுடன் என்னிடம் பேசினார்கள்.

அதில் அவர்கள் பேசிய விடயம் எந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொலைநகல் அனுப்பட்டது என்பது மட்டுமே. அதற்குப் பின்னர் எதுவும் பேசவில்லை.

இதனை அவதானித்தவர்கள் பெரும் நாடகம் ஒன்றை ஆடினார்கள். மேலும் எமது கட்சியின் பெயரில் எழுத்து பிழை திருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

ஆனால் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு முன்னிலையில் திருத்தம் செய்யலாம் என சட்டம் உள்ளது. இந்நிலையில் நாங்கள் இன்றைய தினம் காலை திருத்தம் செய்திருக்கின்றோம் என அவர்கள் தங்கள் தோல்விக்கு முன்னதாக ஒரு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள்.

ஆனால் கூட்டமைப்பு தமிழரசு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றியை அடையும் என்றார்.

Related Posts