Ad Widget

சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது – கே.வி. தவராசா குற்றச்சாட்டு

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூறி வருகிறேன்.

கட்சி என்று கூறும் போது கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு அனைவராலும் சேர்த்தெடுக்கப்பட வேண்டும். தலைவர் ஒரு முடிவு எடுத்தால் கூட கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் கேட்கப்பட வேண்டும். அது மத்திய குழுவில் உள்ள நாடாளுமன்ற குழுவாக இருந்த கூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

எந்தவொரு முடிவும் ஒரு குழுவான முடிவாக இருக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவினை எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்பொழுதுதான் கட்சி நிலைத்து நிற்கும்.

இலங்கை தமிழரசு கட்சி என்பது தனியார் கம்பனியல்ல மக்களின் கட்சி மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து குந்தியிருக்கின்றோம் தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாக்கியுள்ளன. ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உயர் நீதி அரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பலர் சென்று இருக்கின்றார்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயற்பாட்டால், பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது.

அதாவது தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Related Posts