Ad Widget

சுன்னாகம் மின் பிறப்பாக்கிகளை ஏன் அகற்றக்கூடாது? அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சுன்னாகம் பகுதியில் இயங்கும் இலங்கை மின்சார சபையின் ‘நொதேன் பவர்’ நிறுவனம் மற்றும் ‘உதுறு ஜனனி’ திட்டம் ஆகியவற்றின் மின் பிறப்பாக்கிகளை ஏன் அவ்விடத்திலிருந்து அகற்றக்கூடாது என்பதற்கு பொருத்தமான காரணங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு இரண்டு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதிஸ்தரன், திங்கட்கிழமை(17) உத்தரவிட்டார்.

கழிவு நீர் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த 11 பொதுமக்கள் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, திங்கட்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சுன்னாகம் மின்சார சபையின் வளாகத்தில் நிலத்தில் கிடங்கு வெட்டி வெறுமனவே ஊற்றப்பட்ட கழிவு எண்ணெயானது சுற்றாடலிலுள்ள கிணறுகளில் கலந்துள்ளது.

முன்னர் அருகிலுள்ள கிணறுகளுக்கு பரவிய இந்த கழிவு எண்ணெய் பின்னர் மின்சார சபை வளாகத்தை சூழவுள்ள 5 கிலோமீற்றர் பகுதியிலுள்ள கிணறுகளுக்கும் பரவியது.

இதனால் சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய 250 இற்கும் மேற்பட்ட கிணறுகளின் நீரானது கழிவு எண்ணெய் கலந்த நீராக மாசடைந்துள்ளது.

இந்நீரை பருக முடியாது என்பதுடன், குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாது. ஏனெனில் சரும நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை இந்த கழிவு எண்ணெய் நீரானது ஏற்படுத்தும்.

இந்த தாக்கம் குறித்த, விசாரணைகளை உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உள்ளிட்ட பலதரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணற்று நீரை பரிசோதனை செய்து பார்த்த போது, அதில் 30 மில்லிகிராமிற்கும் அதிகமாக கழிவு எண்ணெய் செறிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதி மக்களுக்கான குடிநீர் வழங்கலை உடுவில் பிரதேச சபை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், கிணற்று நீரில் கழிவு எண்ணெய் கலந்தமை தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட மக்களில் 11 பேர் மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபையின் நொர்தேன் பவர் நிறுவனம் மற்றும் ‘உத்துரு ஜனனி’ திட்டம் ஆகியன குறிப்பிடப்பட்டன.

நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்து நீர் மாசடைந்துள்ளதால் பிரதேசத்தில் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. இதனால், ‘உதுறு ஜனனி’ மற்றும் நொதேன் பவர் மின் பிறப்பாக்கிகளின் இயக்கங்களை நிறுத்தி அவற்றை அவ்விடங்களிலிருந்து அகற்றுமாறும் அத்துடன் தமக்குரிய நிவாரணங்களை வழங்குமாறும் பொதுமக்கள் மன்றில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றில் திங்கட்கிழமை (17) எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்போது பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சட்டத்தரணிகள் ஜெ.ஜெயரூபன், பா.பார்த்தீபன், கு.குருபரன், எஸ்.தேவராசா, பி.பூலோகசிங்கம், வி.மணிவண்ணன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கழிவு எண்ணெய் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த சட்டத்தரணிகள் மன்றில் விளக்களித்தனர்.

இதனையடுத்து நீதவான், ‘நொதேன் பவர்’ நிறுவனம் மற்றும் ‘உதுறு ஜனனி’ திட்டம் ஆகியவற்றின் மின் பிறப்பாக்கிகளை ஏன் அவ்விடத்திலிருந்து அகற்றக்கூடாது என்பதற்கு பொருத்தமான காரணங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு இரண்டு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கை இம்மாதம் 27ஆம் திகதி ஒத்திவைத்ததுடன், அத்தினத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

கழிவு எண்ணெய் தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் மல்லாகம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் திங்கட்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts