Ad Widget

சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.

‘சம்பந்தப்பட்ட இடத்தில் பெருமளவு கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினரால் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீடொன்றுக்குள் பதுங்கியிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களினால் தாக்குதல் ஒன்றுக்கு தயாராக வைத்திருந்த வாள்கள், கைகோரிகள், வீச்சு வாள்கள், கிறிஸ் கத்திகள், கைபிடி பொருத்தப்பட்ட வயர்கள் என சுமார் 20 கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மீட்கப்பட்ட வாள்கள் இரண்டில் குருதிக் கரை போன்ற படிவு காணப்பட்டது. அண்மையில் மல்லாகத்தில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி ஜெகன் என்பவருடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலே இது என்பதும் ஆவா என அழைக்கப்படும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவே தயாராகி இருந்தனர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

சந்தேக நபர்களுக்கு வேறு பொலிஸ் நிலையங்களில் வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகள் உள்ளனவா? என்று ஆராயப்படுகின்றன. இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவேண்டியுள்ளது’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts