Ad Widget

சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய்,வடக்கு முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ், மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி அ.ஜெயகுமரன், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் மற்றும் வலிதெற்குப் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்ற இக்கலந்துரையாடலில், சுன்னாகம் பகுதிக் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தற்காலிக மற்றும் நிரந்தரத் தீர்வு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதேசசபையும் வடமாகாண விவசாய அமைச்சும் குடிநீரை விநியோகித்து வருகின்றபோதும் அவற்றின் போதாமைகள் குறித்துப் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேலதிகமாக நீர்த்தாங்கிகளை வழங்குவதற்கும் நீர்த்தாங்கி வாகனங்களின் சேவையை அதிகரிப்பதற்கும் தனது அமைச்சினூடாக உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.

எனினும் தண்ணீர்த் தாங்கி வாகனங்களின் மூலம் குடிநீரை விநியோகிப்பது தற்காலிகத் தீர்வாகவே அமையும் என்பதால், நிரந்தரமான குடிநீர் விநியோகத் திட்டம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

சுன்னாகத்தில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறி குடிநீரில் கலந்துள்ள எண்ணெய் மாசுகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு உதவ முன்வந்திருப்பதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.

வடமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மாத்திரமே தங்களால் அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுன்னாகத்தில் இயங்கும் நொதேண் பவர் தனியார் மின் உற்பத்தி நிலையம் எத்தகைய சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென்ற அறிக்கையைத் தன்னிடம் கையளிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கலந்துரையாடலின் முடிவில் மேலதிக தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாரத்துக்கு ஒரு தடவை கூடி இப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

Related Posts