Ad Widget

சுன்னாகத்தின் நீரைப் பருகாதீர்கள்! 73 வீதமான கிணறுகளில் கழிவு எண்ணெய்!! ஆய்வில் உறுதியானது என்கிறார் ஹக்கீம்!!!

சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிறீஸும் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார்.

சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என்று வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகின்றது என்ற நிலையில் அந்த அறிக்கையை நான் கேட்டும் கூட இதுவரை கண்ணில் காட்டவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 23/2 இன் அடிப்படையில் சுன்னாகம் பகுதிகளிலுள்ள நொதேர்ன் பவர் நிறுவனத்தின் கழிவு எண்ணெய் கலப்பது தொடர்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்தபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் எண்ணெய்ப் படிமங்களும், கிறீஸ் படிமங்களும் படிந்துள்ளனவா என்பது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிபுணர் குழு நடத்திய ஆய்வில் அங்கு குறிப்பிடப்பட்ட கிணறுகளை 73 வீதமான கிணறுகளில் கழிவு எண்ணெய், கிறீஸ் படிமங்கள் படிந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வேறு கிணறுகளுக்கும் இது பரவி வருகிறது. குறிப்பிட்ட மின் உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள இடத்திலிருந்து 2.5 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் இந்தப் பாதிப்பு உள்ளது. இதனால்தான் நாம் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு 6 பவுசர்களில் தினமும் ஒரு குடும்பத்துக்கு 280 லீற்றர் நீர் என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றோம்.

இதற்கான செலவை மின்சார சபையிடம்தான் நாம் அறவிடவேண்டும். ஏனெனில், அவர்களால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள் வழங்க மறுத்தால் வழக்குத் தொடர்வது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுப்போம்.

அந்தப் பகுதியிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய், கிறீஸ் படிமங்கள் படிந்திருக்கின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அந்தக் கிணறுகளின் நீரை அருந்தக்கூடாது. அத்துடன், எமது ஆய்வை இன்னும் விரிவுபடுத்தியுள்ளோம். அந்தப் பகுதியிலுள்ள சகல கிணறுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

கழிவு எண்ணெய் கலந்துள்ளதாகக் கூறப்பட்ட கிணறுகளில் 73 வீதமான கிணறுகளில் கழிவு எண்ணெய், கிறீஸ் படிமங்கள் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவேதான் அந்தக் கிணறுகளிலுள்ள நீரை அருந்தக்கூடாது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிபுணர்குழுவின் ஆய்வுமுறை வேறு. வடக்கு மாகாணசபையின் நிபுணர் குழுவின் ஆய்வுமுறை வேறு. மத்திய அரசின் நிபுணர் குழு கழிவு எண்ணெய் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளது.

ஆனால் வடக்கு மாகாணசபை நிபுணர்குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், அதனை எனக்கு அனுப்புமாறு நான் கோரியபோதும் இதுவரை என் கண்ணில்கூட அந்த அறிக்கை காண்பிக்கப்படவில்லை” – என்றார்.

Related Posts