Ad Widget

சுதந்திரக் கட்சி மத்தியகுழுக் கூட்டத்தை ரத்துச்செய்ய மைத்திரி உத்தரவு – தொடங்கியது பனிப்போர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதையடுத்து, குழப்பமடைந்த, மகிந்த ராஜபக்ச தரப்பு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவைப் பயன்படுத்தி இன்று கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்றிரவு 8 மணிக்கு நடக்கவிருந்த இந்தக் கூட்டத்தை, ரத்துச் செய்யுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எனினும், மைத்திரிபால சிறிசேனவை கட்சித் தலைமையில் இருந்து நீக்கும் முடிவை மகிந்த தரப்பு எடுத்தால், அவரது உத்தரவை மீறி செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி, புதிய தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக, வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிநத ராஜபக்சவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும் கூட, அவரைப் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்றும் நேற்று மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் கொழும்பில், டார்லி வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மகிந்த ராஜபக்சவிடம், மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Related Posts