Ad Widget

சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை நிறுத்துங்கள்! இல்லையேல் புதிய கட்சி!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 60இற்கு மேற்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று தங்காலையில் கார்ல்டன் வீட்டில் சந்தித்தனர்.

mahintha

இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, சாலிந்த திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ஸ, டீ.பி.ஏக்கநாயக்க, ஜி.எல்.பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தினேஷ் குணவர்தன, குமார வெல்கம, எஸ்.எம்.சந்திரசேன மற்றும் அருந்திக பெர்னாண்டோ உள்ளிட்டவர்களுடன் நாமல் ராஜபக்‌ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 60 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அண்மையில் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்ட 5 பேர் தொடர்பாகவும் அதற்கு மாற்றீடாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் தொடர்பாகவும் காரசாரமான பேச்சு இடம்பெற்றது.

அத்துடன், நடைமுறை அரசியல் தொடர்பாகவும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இது சாத்தியப்படாவிட்டால் அவரை புதிய கட்சியில் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“அன்னம் சின்னத்தில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துக் கொண்டிருக்கின்றார். சு.கவின் பழைய அங்கத்தவர்களை இல்லாது செய்யும் வகையில் அவரின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளன. மழைக்கு முளைத்த காளான்களுக்கெல்லாம் கட்சியில் உயர்மட்ட பதவிகளை மைத்திரிபால வழங்கியுள்ளார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாமல் ஒற்றுமையுடன் செயற்படவே நாங்கள் தொடர்ந்தும் முயற்சிக்கின்றோம். எனினும், தற்போது அந்நிலை உருவாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு இணைந்து செயற்பட முடியாது. அவர்களது கொள்கைக்கும் எமது கொள்கைக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இந்த அரசை முன்னெடுக்க முடியாது.

ஐ.தே.கவின் விருப்புக்கேற்ற மாதிரி நாம் தலையசைக்க முடியாது. புதிய அரசு 100 நாட்களுக்குள் பாரிய ஆட்டத்தைக் கண்டுள்ளது. மக்கள் மத்தியில் நம்பிக்கையில்லாது போயுள்ளது. கட்சிக்குள் எமக்கு தொடர்ந்தும் வெட்டு இருக்குமாயின், நாங்கள் எமது அடுத்தகட்ட நகர்வை வேறு திசையில் அமைத்துக்கொள்ள வேண்டி ஏற்படும்.

மஹிந்த ராஜபக்‌ஷ பொதுத் தேர்தலில் சு.கவின் பிரதம வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்ட சிலர் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். இதனால் கட்சி பிளவுபடும் அபாயம் காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் புதிய கட்சியை நிறுவி கூட்டமைப்பு அமைத்துக்கொண்டு எமது அடுத்தகட்ட அரசியல் பிரவேசம் அமையும். இதனால் புதிய அரசு விரைவில் கவிழ்க்கப்பட்டுவிடும். விமல் வீரவன்ஸ உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மஹிந்தவை பிரதமராக்கும் கூட்டத்தொடரில் எதிர்வரும் 8ஆம் திகதி குருநாகல் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்வார் என நாங்கள் எதிர்பார்ப்பதுடன், சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு ஏற்பாடுகளில் நாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்தும் உள்ளோம்” – என்றார்.

Related Posts