Ad Widget

சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயப் பகுதியில் இராணுவம் நடாத்தி வரும் உல்லாச விடுதியை வடமாகாண சபையிடம் கையளிக்க வேண்டும்- அமைச்சர் ஐங்கரநேசன்.

சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்;.

உலக வலசைப் பறவைகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கான கருத்தமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிகளின் இறுதி அமர்வாக மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் – போர் முடிந்த பின்னர் வடக்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி வடக்குக்கு அதிக வருவாயை ஈட்டித் தரத்தக்க துறையாக சுற்றுலாவை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அதே சமயம், சுற்றுலாவால் எமது பண்பாடும் சுற்றுச்சூழலும் பாதிக்காதிருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு, வடக்கின் சுற்றுலாவை இயற்கை சார்ந்த சூழலியற் சுற்றுலாவாக ஊக்குவிப்பதே பொருத்தமானது.

தமிழ்நாட்டில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலக அளவில் பெயர் பெற்றது. ஐரோப்பிய நாடுகளில் குளிர் உறைக்கத் தொடங்கும் போது அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் கூடுகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. இந்த வலசைப் பறவைகளைக் கண்டுகளிப்பதற்கென்று ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பறவை ஆய்வாளர்களும் இங்கு வந்து செல்வார்கள்.

வேடந்தாங்கல் போன்றுதான் எமது சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும் வலசைப் பறவைகளுக்கு மிகவும் உவப்பான ஒரு சூழல். இது தென் இலங்கையின் குமண பறவைகள் சரணாலயத்துக்கு அடுத்த படியாக பிரசித்தமானது. பூநாரை உட்பட அரிய பல பறவை இனங்களை இங்கு நான் பார்த்திருக்கிறேன். போர் காரணமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்தப் பறவைகள் சரணாலயத்தை நாம் வடக்கின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக விருத்தி செய்ய வேண்டும்.

ஆனால், போருக்குப் பிறகு எல்லாத்துறைகளிலும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய படைத்தரப்பு சுற்றுலாத்துறையையும் விட்டுவைக்க விரும்பவில்லை. வலி.வடக்கில் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கென்று தலசெவன என்ற உல்லாச விடுதியை உருவாக்கி வைத்திருக்கிறது. அதேபோன்று,சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயப் பகுதியில் நேச்சர் றிசோட் என்ற உல்லாச விடுதியை உருவாக்கி வைத்திருக்கிறது.

வடக்கின் பொருளாதாரத்தை தமதாக்க முனையும் இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இராணுவம் இவற்றை வடக்கு மாகாணசபையின் சுற்றுலாப்பிரிவிடம் கையளிக்க வேண்டும் – என்றார். இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் பா.கஐதீபன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் பல்கலைக்கழக விலங்கியற்துறை விரிவுரையாளர் க.கணபதி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Posts