Ad Widget

சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டிய காவல்துறை உத்தியோகஸ்தர் மீது மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் , மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி , உடுப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் பாண் வாங்குவதற்காக கடைக்கு சென்று , பாண் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை , அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் , வழிமறித்து , நாம் மோட்டார் சைக்கிளிலை மறித்த போது நிறுத்தாமல் ஏன் ஓடினாய் என தகாத வார்த்தைகளால் பேசி அவரது மோட்டார் சைக்கிளையும் உதைத்துள்ளார்.

அதன் போது அவர் தான் சந்திக்கு வரவில்லை எனவும் , தான் பக்கத்து கடையில் பாண் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் , பதிலளித்துள்ளார்.

அதன் போது குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் தனது துப்பாக்கியை அவருக்கு நீட்டி “நான் நினைத்தால் இதிலையே சுட்டுப்படுகொலை செய்வேன் உன்னை ” என மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
பின்னர் துப்பாக்கி முனையில் அவரை சந்திக்கு அழைத்து சென்ற போது , சந்தியில் நின்ற மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் இவரை மறிக்கவில்லை , தப்பி சென்றவர் இவர் இல்லை என கூறியுள்ளார்.

அதன் போது துப்பாக்கி முனையில் அழைத்து சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் மோட்டார் சைக்கிள் ஓட்டியை ஓடு என மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி துரத்தி உள்ளார்.

பொதுமகன் ஒருவருடன் பொதுமக்கள் முன்னிலையில் பொது இடத்தில் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதுடன் , துப்பாக்கி காட்டி “சுட்டுப்படுகொலை செய்வேன் ” என மிரட்டியமை இங்கு கூடியிருந்த மக்கள் அச்சமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரினால் , மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் காங்கேசன்துறை காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு காவல்துறை பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் ,பொதுமக்களுடன் அவர்கள் அவ்வாறு அநாகரிகமாக பல தடவைகள் நடந்து கொண்டுள்ளார்கள் எனவும் , அண்மையில் துன்னாலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து உடைத்து சேதபடுத்தினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இவர்கள் மாலை வேளைகளில் கைகளில் விக்கெட் உடன் வீதிகளில் நடமாடி திரிந்து மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொள்பவர்கள் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு காவல்துறை பிரிவை சேர்ந்தவர்களே இவ்வாறு பொதுமக்களுடன் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்

Related Posts