Ad Widget

சுட்டுக்கொல்லப்பட்டவருடன் சென்றவர் வெளியிட்டுள்ள தகவல்!

யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் மரணமடைந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்றபோது அவருடன் கூடவே சென்ற மற்றுமொரு இளைஞர் அது தொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்,

“எமது நண்பர் ஒருவரின் மோட்­டார் சைக்­கி­ளுக்கு, பெற்­றோல் இல்லை என்று கூறி­ய­தால், நாங்கள் இருவரும் எமது மோட்­டார் சைக்­கி­ளி­லி­ருந்து சிறிது பெற்­றோலை எடுத்­துச்­சென்று அவரிடம் கொடுத்து விட்டு திரும்பி வந்­து­கொண்­டி­ருந்­தோம். இவ்வாறு வந்துகொண்டிருக்கையில் மணி­யந்­தோட்­டம் சந்­தியை அண்­மித்­த­போது எமக்கு எதிரே இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்திருந்தார்கள்.

எமக்கு அருகில் வந்ததும் தமது மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்தினார்கள். அவர்களில் ஒருவர் உடனடியாக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எனது நண்பனுக்கு சுட்டார். இதனால் நண்பனின் முதுகில் காயம் ஏற்பட்டது. அப்படியே சென்றுகொண்டிருக்கையில் தனக்கு மயக்கம் வருவதாகக் கூறினார். இதையடுத்து அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் நண்பனை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றோம்.” என்றார் அவர்.

இதுகுறித்து இறந்தவரின் உறவினர்கள் குறிப்பிடுகையில்,

“அவர் தனது வீட்டில் உணவு உட்கொண்டிருந்த சமயம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதனையடுத்து அவர் உடனடியாக வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றார். அதன் பின்னர் அவர் சுடப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது.” என்று கொலையுண்டவரின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை மரணமடைந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் நேற்றிரவு வைக்கப்பட்டிருந்த சமயம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts