Ad Widget

சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சுரேஸ் கேள்வி

அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது – சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா – அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கொலை சம்பவம் தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்வேறுபட்ட தேவைகள் இருக்கலாம். இரவில் தமது இருப்பிடத்திற்குச் சென்றடைவதற்கு அவர்கள் மிகவும் விரைவாகவும் சென்றிருக்கலாம். இருட்டில் மறைந்து நின்று திடீரென மோட்டார் சைக்கிள்களை நிறுத்த அல்லது மறிக்கின்ற போது உடனடியாக நிறுத்தக்கூடிய விடயமும் அல்ல.

அது மட்டுமன்றி அவ்வாறாக யாராவது தப்பித்துச் செல்வதாக இருந்தால், அவர்களைத் தொடர்ந்து சென்று கைது செய்வதற்கான வழிமுறைகளும் பொலிசாரிடம் இருக்கின்றது. அல்லது வேறுவழிகளைப் பின்பற்றியிருக்கலாம்.

இந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் கூட அது நிறைவேற்றப்படாமல் நீண்டநாட்களாக சிறைத்தண்டையைத்தான் அனுபவித்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் இரண்டு அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் என்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்படவேண்டியதும் ஆகும்.

சம்பந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்பொழுது நெஞ்சிலே குண்டடிபட்டுத்தான் அந்த மாணவன் இறந்திருப்பதாக அவரது பெற்றோரும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மாணவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிப்போயிருக்கக் கூடுமாக இருந்தால், துப்பாக்கிக் குண்டுகள் முதுகில் துளைத்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஆனால் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதானது அவர்கள் வருகின்றபொழுது எதிரில் நின்று துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

இந்த நிலையில் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. அவ்வாறு நடந்திருக்குமாயின் யாழ்ப்பாணத்தைக் கலவரபூமியாக்க பொலிசாரின் பின்னணியில் யாராவது இயங்குகின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது என அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts