Ad Widget

சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் மாநகர முன்றலில் பணி புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (02) மேற்கொண்டனர்.

சுகாதார தொழிலாளர்களாகிய தங்களை வீதி புனரமைப்பு வேலைக்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சுகாதார தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.

இது தொடர்பில் தெரியவருதாவது,

யாழ். மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றுவதற்காக 22 பெண், 55 ஆண்கள் தொழிலாளர்கள் என மொத்தம் 77 புதிய சுகாதார தொழிலாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனால் திங்கட்கிழமை (01) வழங்கப்பட்டன.

இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் 30 பேரை, வீதி புனரமைப்பு பணிகளுக்காக சுகாதார பிரிவு பொறுப்பதிகாரி செவ்வாய்க்கிழமை (02) அனுப்பி வைத்தார். இதனால், அதிருப்தி கொண்ட தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துக்கூறுகையில்,

ஆணையாளர் நியாயமான முறையில் எமக்கு நியமனம் வழங்கினார். ஆனால் அவர் தற்போது இங்கு இல்லாத நிலையில், மாநகர சபை சுத்திகரிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்மை வீதி புனரமைப்பு வேலைக்கு அனுப்புகின்றார்.

சேவையிலும், தரத்திலும் பொருத்தமான பொறுப்பு மிகுந்த அதிகாரியை எங்களுக்கு வழங்கவேண்டும். அவ்வாறான அதிகாரிகளுக்கே தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகள் தெரியும்.

யாழ். மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் எமக்கு நல்ல தீர்வை பெற்றுத்தர வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபை சுகாதார பிரிவு பொறுப்பதிகாரியிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் நிர்வாக ரீதியான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. மழைகாலம் என்பதால், அதிக கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தான் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஆனால், இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சுத்திகரிப்பு வேலைகள் குறைவாக காணப்பட்டதால், அவர்களில் ஒரு பகுதியினரை வீதி புனரமைப்பு வேலைகளுக்கு அனுப்பினோம். இது தொடர்பில் மாநகர ஆணையாளருக்கு தெரிவித்துள்ளேன்.

தொழிலாளர்கள் தாம் நினைத்தபடி, சுயநலமாக செயற்பட எண்ணுகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

மாநகர ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் இல்லாத காரணத்தால் இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு அவருடைய கருத்தை அறிய முடியவில்லை.

Related Posts